Pages

Saturday 10 May 2014

நரகம் - ஓரு புதிர்.

பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதற்காக நரகம் என்ற ஒரு அமைப்பு இருப்பதாக இந்து மதம் முதல் புத்த, ஜைன மற்றும் பல்வேறு மதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்து மத புராணமான கருட புராணத்தில் இந்த நரகங்களை பற்றி விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக “தாமிசிர நரகம்” முதல் “சூசிமுகம்” வரை 28 நரகங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. புத்த மார்க்கத்தில், அபிதர்ம கோசாவில் எட்டு குளிர் நரகங்களும், எட்டு சுடு நரகங்களும் சொல்லப் பட்டு இருக்கிறது. ஜைன மார்க்கத்தில் நரகம் ஏழு இடங்களில் இருப்பதாக சொல்லப் பட்டு இருக்கிறது. பாபிலோன், எகிப்து, கிரேக்கம், எஸ்டோனியன், மாயன், பார்சியன், ரோமன், சுமேரியன், கிருஸ்து, இஸ்லாம் உள்பட சுமார் 42 பிரிவுகளில் உள்ள புராணங்களில் (Mythology) நரகம், பாதாள உலகம் (Underworld or Hell) என்ற பெயரில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 


இந்த நரகங்களில் எண்ணை சட்டியில் இட்டு வறுப்பது முதல் கொடிய சித்ரவதை வரை வித விதமான குற்றங்களுக்கு வித விதமான தண்டனைகள் ஒவ்வொரு நரகத்திலும் சொல்லப்பட்டு உள்ளது.

உயிரியல் கோட்பாடுகளின்படி உடல் அமைந்து நன்கு வளர்ச்சி அடைந்த நரம்பு மண்டலம் இருந்தால் மட்டுமே வலி என்ற ஒன்றை நாம் உணர முடியும். இந்த வலியை உணர்வதற்கு மிக வளர்ச்சியடைந்த மூளை தேவைப்படுகிறது. எனவே மனிதன் இறந்ததும் அவனது உடலை அழித்தப்பின், உடலுக்கான தண்டனைகளை, அவனது உயிர் அல்லது ஆன்மா என்று சொல்லப்படும் ஒன்றுக்கு எப்படி கொடுக்க முடியும்?. வலி என்ற ஒரு உணர்வு எற்பட உடம்பு இல்லாத நிலையில் ஆன்மாவிற்கு எப்படி வலி இருக்க முடியும்?. 

மேற்கூறிய நரகங்களில் சொல்லப்பட்ட அத்தனை தண்டனைகளும் உடலுக்கானது. உயிர் அல்லது ஆன்மாவிற்கான தண்டனைகளை எது என்று சரியாக சொல்லப்படவில்லை. உடலில்லாத உயிர் அல்லது ஆன்மாவை எப்படி தண்டிப்பது?.

இந்த நரகங்கள் சொல்லப்பட்ட விதமும் தண்டனைகளும் விவரங்களும் சிறைச்சாலையோடு ஒப்பிட முடிகிறது. ஒருவன் செய்யும் தவறுகளுக்கு அவன் வாழும் போதே அவன் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகள் நரகங்களில் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனுடைய பொருள் நமக்கு விளங்குகிறது. ஆனால் இதே தண்டனைகள் ஆன்மாவிற்கு சொல்லப்படுவது பொருத்தமாக இல்லை.

அதே சமயம், இந்த நரகங்களில் வாயிலாக மிக உன்னதமான தத்துவம் சொல்லபட்டு இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் செய்யும் நல்லவை மற்றும் தீயவை அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற  concept ஒரு சிறந்த Evaluation System. இதற்கு சிறந்த Data Recording and Management System வேண்டும். ஒன்று விடாமல் பதிவு செய்ய Continuous Recording System தேவைப் படுகிறது. இவற்றை செய்ய மிக நவீன, மிக மிக பெரிய கட்டமைப்பு தேவை. விரிவான Planning and Execution வேண்டும். Accurate Recording and Verification தேவை. தவறு நடக்கவே கூடாது (Zero Error). சீர் தூக்கி பார்க்க Data compilation and Analysis செய்யப் பட வேண்டும். பதிவு செய்தது அழிந்து போகாமல் இருக்க பாதுகாப்பு – Data Security and Archives தேவை. சிந்தித்து பார்க்கையில் எவ்வளவு பெரிய Data Management System வேண்டும். தான் செய்யும் அனைத்திற்கும் தாமே பொறுப்பு என்னும் Individual Accountability  நிலை நாட்டப்படும். கொள்கை ரீதியில் எவ்வளவு பெரிய சிந்தனை?. எவ்வளவு பெரிய Global Management Concept?.

மனிதன் செய்யும் தவறுகளை அவற்றின் விளைவுகளுக்கு ஏற்ப தண்டனைகள் கூறி இருப்பது மனிதன் தவறுகளை செய்யாதிருக்க சொல்லப்பட்ட பெரிய தத்துவம். எச்சரிக்கை மணி. தீயது செய்தால் நரகமும் நல்லது செய்தால் சொர்கமும் அடையப்படும் என்ற நீதி மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டி. மேலும் ஒரே மனிதன் செய்த தவறுகளுக்காக சில காலம் நரகத்திற்கு சென்று மீண்டும் அவன் செய்த நன்மைகளுக்காக சொர்க்கத்தை சென்றடைவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவரவர்கள் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப நரகமும் சொர்க்கமும் மாறி மாறி கொடுக்கப்படுகிறது. இதில் சில உயரிய தத்துவங்கள் உள்ளன. தீமை செய்தால் தண்டனை கிடைக்கும், தீமைக்கேற்ப தண்டனை கொடுக்கப்படும், அது போலவே நன்மை செய்தால் உயரிய சந்தோஷம் கிடைக்கும்.

தீமை செய்தால் நரகம் கிடைக்கும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தால் மக்கள் தீமை செய்யாமல் இருக்க முயற்சி செய்வார்கள். அதே நேரம் அவர்கள் எந்த நன்மையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஏனெனில் நன்மை செய்தாலும் செய்யாவிட்டாலும் கிடைப்பது ஒன்றும் இல்லை என்னும் போது யாரும் நன்மை செய்ய முன்வரப்போவதில்லை.

எனவே, தீமை செய்தால் நரகமும், நன்மை செய்தால் சொர்க்கமும் கிடைக்கும் என்ற தத்துவத்தினால் மக்கள் தவறுகளையும் குறைத்துக்கொண்டு நன்மைகளை செய்ய வழிவகுக்கும். ஒரு மனிதன் செய்யும் நன்மையும் தீமையும் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது. ஒரு நல்ல சமூகம் அமைய அதனுடைய மக்கள் தீமைகளை குறைத்துக்கொள்ளவும் அதே நேரத்தில் நன்மைகள் பல புரியவும் இந்த நரக தத்துவம் பெரிதும் உதவுகிறது.

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பிராயசித்தமாக சில நன்மைகள் செய்தால் அதிலிருந்து பாவங்கள் கழிக்கப்படும் என்ற எண்ணம் இன்றைய சமூகத்தில் மிக ஆழமாக பதிந்திருக்கிறது. எனவே தான் எத்தனை தவறு செய்தாலும் அதற்கேற்ப தான, தர்ம, பூஜைகளை செய்வதால் தாங்கள் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற இன்றைய கால நம்பிக்கையை நரக தத்துவம் உடைத்து எறிகிறது. தீமைக்கு  தண்டனையும், நன்மைக்கு சந்தோஷமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒரு சமூகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும். 

தவறுகளுக்கு தண்டனை அளிக்கும் அதே நேரத்தில் செய்யும் நன்மைகளுக்கு பரிசு கொடுக்கும் தத்துவம் இன்றைய உயர் நிலை நிர்வாக கோட்பாடாக (High level Management concept) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


Sunday 2 March 2014

மனிதருடைய கடவுள்கள்

உலகம் முழுவதும் கடவுள்களாக அறியப்பட்ட அனைவரும் உயிரியல் கோட்பாடுகளின்படி (Biological Principles) உள்ளனர். மனித உருவில், விலங்கு உருவில் அல்லது இரண்டும் கலந்த உருவங்களை கொண்டதாக கடவுள்கள் உள்ளனர். உயிரியல் கோட்பாடுகளின்படி தலை, கண், காது, மூக்கு, வாய், கை, கால் ஆகியவை அமையப்பெற்று கடவுளின் உருவமாக வணங்கப்பட்டு வருகின்றனர். கடவுள்கள் ரூப, அரூப வடிவிலும் அதன்பின் மனித உருவிலும் சொல்லப்பட்டு உள்ளனர்.
 
கடவுள்கள் அனைவரும் மனிதர்கள் அறிந்த விஞ்ஞான கோட்பாடுகளின்படியே (Scientific Principles) உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே உருவமற்ற கடவுளை அறிய முயற்சித்து உள்ளனர். கடவுள்களை அனுபவ ரீதியாக அறிந்ததாக சொல்லப்பட்டதே தவிர முழு ஞானமும் தெளிவு படவில்லை. மனித அறிவியல் அறிவை தாண்டி கடவுளை அறிந்து கொள்ள முயற்சி இது வரை முழுமை அடையவில்லை.

தாம் அறிந்த அனைத்திற்கும் பெயரிடும் பழக்கம் மனிதர்களிடம் மட்டும் உள்ளது. இவர்கள் கடவுள்களையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் கடவுள்களுக்கு அந்தந்த கால வழக்கப்படி பெயரிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பெயரிடப்படாத கடவுள் இல்லை.  

தமக்கு ஆபத்து வரும் பொழுது கடவுள் பெரும்பாலும் மனித உருவத்தில் வந்து காத்ததாக சரித்திரம் சொல்கிறது. ஒரு சில  நேரங்களில் விலங்கு வடிவிலும் வந்ததாக கூறபட்டு இருக்கிறது. விலங்குகள் வடிவில் வந்த கடவுள் கூட தான் உருவெடுத்து வந்த இனத்தை காக்காமல் மனிதனையே காப்பாற்றி வந்ததாக கூறப்பட்டு உள்ளது. இது முழுக்க “மனிதனை மையப்படுத்திய சிந்தனை” (Human Centered Thought). கடவுள் மனித உருவிலோ அல்லது விலங்கின் உருவிலோ வந்து தம் இனத்தை மட்டுமே காப்பதாக நம்புகின்றனர். இது போன்ற வடிவங்களில் வந்த கடவுள்கள் மனிதனை தவிர வேறு எந்த இனத்தையும் காத்ததாக சரித்திரம் இல்லை.

 எந்த ஒரு கடவுளும் மான் வடிவில் வந்து மான் இனத்தையோ அல்லது மீன் உருவதில் வந்து மீன் இனத்தையோ காத்ததாக எந்த ஒரு சரித்திரமும் இல்லை. கடவுள் மனித உருவிலோ அல்லது விலங்கு உருவிலோ வந்து மனித இனத்தை மட்டுமே காத்ததாக கூறப்படுகிறது. மரங்களை கூட கடவுளாக வழிபட்டு, அந்த மரங்களின் வடிவில் உள்ள கடவுள் கூட மனிதனுக்கு உதவ அல்லது நல்லது செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர். விலங்கு உருவிலோ அல்லது தாவரங்களின் உருவிலோ வரும் கடவுள் தன்னைத் தவிர மற்ற விலங்கு மற்றும் தாவர இனங்களை காப்பாற்ற மனித மனம் நினைக்கவில்லை. இது ஒரு ஆழமான மனிதனை மையப்படுத்திய சிந்தனை.

உருவில் மிகப்பெரியதாக, அதிக சக்தியை கொண்ட டைனாசரஸ் இனம் ஒரு கால கட்டத்தில் முழுவதும் அழிந்து விட்டது அந்த சமயத்தில் எந்த ஒரு கடவுளும் டைனாசரஸ் வடிவில் வந்து டைனாசரஸ் இனத்தை காக்கவில்லை. இது போல் பல இனங்கள் அழிந்து உள்ளன். ஒரு உயிர் போவது விதி என்று சொல்லப்படலாம், ஆனால் ஓர் இனமே அழிவது விதி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகத்தின் பரிணாம சக்கரத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான இனங்கள் முழுவதுமாக அழிந்துள்ளன. அதிகமாக சிந்திக்க தெரிந்த ஒரே காரணத்தினால் மனிதன் தன்னை உலகத்தில் மிக முக்கியமான இனமாக நினைத்தால் கடவுள் எந்த வடிவிலாவது தம்மை காப்பாற்றுவார் என்று நம்பப்படுகிறது.

 ஒவ்வொரு இனத்திற்கும் அதன் “சிந்தனையின் அளவுகோல்” உண்டு  (Thought Scale). மனிதனுடய சிந்திக்கும் அளவு நாமறிந்த வரையில் மிக அதிகம். இந்த ஒரு காரணத்தினாலேயே கடவுள் நம்மை காப்பாற்றுவார் அல்லது காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

சூரிய மண்டலத்தில் ஏற்படக்கூடிய ஒரு விபத்தால், பூமி அதன் சுற்றுவழியில் இருந்து விலக்கப்பட்டாலோ அல்லது தூக்கி எறியப்பட்டாலோ மனித இனம் சில நொடிகளில் அழிந்துவிடும். ஒரு இனம் உருவாவதும், அழிவதும் இயற்கையில் நடந்து வரும் செயலாகும், இதற்கு மனித இனமும் விதிவிலக்கல்ல. எனவே மனிதன் தன் இனத்தை மட்டும் கடவுள் எந்த வடிவிலாவது காப்பாற்றுவார் என்பது ஒரு  நம்பிக்கையே. சிந்திக்க தொடங்கிய மனிதனுக்கு தன்னைவிட சக்தி படைத்தவர் தன்னை காப்பாற்றுவார் என்ற தீவிர நம்பிக்கை உள்ளது. அதனால் எப்பாடுபட்டாவது, எந்த வழியிலாவது, வணங்கியோ, வழிப்பட்டோ தன்னை விட அந்த பெரிய சக்தியிடம் இருந்து உதவி பெற்றுவிட வேண்டும் என்ற தீவிர போராட்டம் காலம் காலமாக  நடந்து கொண்டே வருகிறது.

மனிதனைவிட குறைவான சிந்தனை அளவுகோல் கொண்ட விலங்குகள் தன்னுடைய கஷ்டங்களை பற்றி அதிகம் சிந்திப்பதாக தெரியவில்லை. எனவே அவற்றுக்கு தன்னை காப்பற்றிக்கொள்ள தன்னைவிட பெரிய சக்தியிடம் வழிபட வேண்டும் என்று கூட தோன்றவில்லை .எனவே தான் அவற்றுக்கு கடவுளை பற்றிய ஞானம் தேவைப்படவில்லை.  

Sunday 9 February 2014

தர்மம், அதர்மம் – எது வெல்லும்?

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், அதர்மத்தை தர்மம் வெல்லும் என்பது கண்டும் கேட்டும் அறிந்த ஒரு தத்துவம். இது ஒரே முறை மட்டும் நடக்கும், அல்லது நடந்தது அல்ல. அது போல இதோடு சரித்திரம் முடிந்து விடவில்லை. மறுபடி அதர்மம் வெல்லும் இதை மறுபடியும் தர்மம் வெல்லும். இது காலம் காலமாக நடந்து கொண்டே வருகிறது. ஏன் இந்த தொடர் போராட்டம்? இந்த சரித்திர உண்மையை நாம் வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்க்கலாம்.

தர்மம் அதர்மம் இந்த இரண்டயும் மீறி ஒரு மூன்றாவது காரணி (Factor) இருக்கிறது. அதன் பெயர்அதிகாரம் (AUTHORITY/POWER).
 
தர்மம் அல்லது அதர்மம் இந்த இரண்டில் அதிகாரம் எந்த பக்கம் இருக்கிறதோ அதுவே வெல்கிறது. அதிகாரம் நல்லவர்களின் (தர்மவான்கள் – Ethical People) கையில் இருக்கும் பொழுது தர்மம் வெல்கிறது. ஆனால் அது தீயவர்களின் (அதர்மவான்கள் – Unethical People) கையில் வரும் போது அதர்மம் வெல்கிறது.

ஆனால் அதிகாரம் ஒருவர் கையில், ஒரு இடத்தில், காலம் காலமாக இருப்பதில்லை. எனவே தர்மமும் அல்லது அதர்மமும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டே வருகிறது. இதனால், புத்தி உள்ளவர்களும் பலம் உள்ளவர்களும் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி ஆதி காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகிறது.

அரசாட்சி காலத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம் நல்ல அரசர்கள் கையில் செல்லும் பொழுது நல்ல ஆட்சி மலர்ந்து தர்மம் வாழ்கிறது. அதே சமயம் அதிகாரம் கொடுங்கோல் அரசர்களிடம் சிக்கும் பொழுது அதர்மத்தின் ஆட்சி நடைபெற்றது

இன்றைய ஆட்சி அமைப்பில் அரசாங்க அதிகாரம் தர்மவான்களின் கையில் இருக்கும் பொழுது தர்மத்தின் ஆட்சி நடைபெற்று  நாடு மேலும் மேலும் வளர்கிறது. மாறாக அரசாங்க அதிகாரம் தவறானவர்களிடம் செல்லும் பொழுது அதர்மத்தின் மோசமான ஆட்சியை காண முடிகிறது

ஒரு சமூகம் நல்லவர்களின் கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான அரசியல் அமைப்பும் (Constitutional frame), சூழ்நிலையும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே தர்மம் ஜெயிக்க முடியும். நல்ல சிந்தனையும், நல்ல அரசியல் அறிவும் இல்லாத சமூகத்தில் அதிகாரம் தவறானவர்களின் கையில் செல்லும் பொழுது தர்மம் வலுவிழந்து அதர்மம் வெல்கிறது.

அதிகாரம் தர்மத்தின் கையில் இருக்கும் பொழுது காணப்படும் வளர்ச்சியும் சுபிட்சமும் அதர்மம் வெல்லும் பொழுது அழிக்கப் படுகிறது. ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் பொழுது நடந்து கொண்டிருக்கும் அதர்மங்களை தடுத்து நிறுத்துமே தவிர அதர்மத்தினால் ஏற்பட்ட எல்லா அழிவுகளையும் முழுமையாக மீட்க முடிவதில்லை.

தர்மம் என்பது நல்ல நெறிமுறைகளை கடைபிடிக்க சொல்லும் ஒரு தத்துவம். அரச தர்மம், யுத்த தர்மம், சமூக தர்மம், வியாபார தர்மம், தனி மனித தர்மம் என்று பல வகைகளில் சொல்லபட்டு இருக்கிறது. இந்த தர்மங்கள் தேசத்திற்கு, சமூகத்திற்கு, தனி மனிதனுக்கு ஏற்ப மாறுபடுகிறது. காலங்கள் மாற மாற இந்த தர்மங்களும் மாறி வருகின்றன. தர்மங்களின் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்தை பெரிய அளவில் பாதிக்கின்றன

இப்படி உருவாக்கபட்ட  நல்ல தர்மங்களின் வழியில் ஒரு சமூகம் நடை போ வேண்டும். இந்த தர்மங்களை காப்பதற்கு ஒரு சமூகம் தர்மவான்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். தர்மத்தின் வழியே ஒரு சமூகம் ஆளப்படும் பொழுது காணப்படும் நல்லாட்சி அதர்மவான்கள் கையில் சிக்கும் பொழுது சீரழிய தொடங்கி நாடு நாசமாக தொடங்குகிறது.

சர்வதேச அரசியலை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அறிவும் பலமும் உள்ள நாடுகள் மற்ற நாடுகளை அழிக்க பெரும் திட்டங்கள் போட்டு செயல்படுவதுண்டு (International Intelligence). அதில் முக்கியமானது, அந்த நாடுகளின் அதிகாரம் அதர்மவான்களின் கையில் சென்று அடைய திட்டங்கள் தீட்டப்படும். பணபலத்தாலும் மற்ற பிற யுக்திகளினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டில் உள்ள அதிகாரங்களை அதர்மவான்கள் கையில் சென்று அடைய செய்யப்படும். அதன் பின் அந்த நாடுகள் தானாகவே நாசமாக தொடங்கிவிடும். அன்றும் இப்படி அழிந்த நாடுகள் நிறைய உண்டு, இன்றும் அழிந்து கொண்டிருக்கும் நாடுகளும் உண்டு.

இதே தந்திரம் பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்து கொண்டு வருகிறது. இது ஒரு வியாபார தந்திரமாக கடைபிடிக்கப்பட்டு வியாபார யுத்தமாக (Corporate war) நடைபெற்று வருகிறது. எனவே ஒரு நாடோ, ஒரு சமூகமோ அல்லது ஒரு நிறுவனமோ அதன் அதிகாரங்களை திறமையான நல்லவர்களின் கையில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுவது மிக மிக முக்கியம்.

இல்லாவிடில், தர்மத்தின் வாழ்வுதனை மறுபடி, மறுபடி சூது கவ்வும், அதர்மத்தை மீண்டும், மீண்டும் தர்மம் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும்.