கடவுள்களை
பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியாக நிறைய தத்துவங்களும், விளக்கங்களும், இருந்தாலும்
இன்னும் முழுமை அடையவில்லை. கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி விரிவாக கேள்வி கேட்க அனுமதி
இல்லாததாலும் அறிவியல் முறைப் படி பகுத்து ஆராய இயலாததாலும் கடவுள்களின் எண்ணிக்கையும்
அதிகம், அவதாரங்களும் அதிகம், குழப்பங்களும் அதிகம்.
நம்புவது வேறு, நிஜத்தை அறிவது வேறு. எதை
வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கடவுளாக நம்புவது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை.
அவர்கள் நம்பும்போது எந்த விளக்கமும் தேவையில்லை, முழு சரித்திரமும் தேவை இல்லை. உலகில்
உள்ள எத்தனை பேருக்கு தாங்கள் வணங்கும் கடவுளைப் பற்றிய சரியான விவரங்கள் தெரியும்?.
இந்த நிலையில் கடவுளின் அவதாரங்கள் என்று
சொல்லப்படுகிற உப கடவுள்களின் விவரங்களில் கதைகளும், குழப்பங்களும் நிறைய இருக்கின்றன.
ஒரு மனிதப் பிறவி, விலங்கு, உயிருள்ள அல்லது உயிற்ற பொருள்கள் ஆகியவற்றை அவதாரங்களாக
சொல்லப் படும் போது அதனுடைய நம்பகத் தன்மை பற்றிய பல தகவல்கள் தேவைப் படுகிறது., யாரிடம்
விவரங்கள் அறிந்து கொள்ள முடியும்?
ஒரு மூலக் கடவுளின் அவதாரமாக ஒன்றை சொல்லும்
போது எந்த அடிப்படையில் சொல்லப் படுகிறது என்று கட்டுப்பாடுகள் இல்லை. யாரை வேண்டுமானாலும்
யாருடைய அவதாரமாக வேண்டுமானாலும் சொல்ல முடியும். எப்படி என்று கேட்க அனுமதி இல்லை.
உண்மையா இல்லையா என்பதற்கு விவரங்கள் இல்லை. சில சமயங்களில், சிலரின் நம்பிக்கையாக
அவதாரங்கள் சொல்லப் பட்டு நாளடைவில் அனைவராலும் ஏற்கப் பட்ட நிலை நிறைய உண்டு. இதற்கு
அந்த மூலக் கடவுள் அனுமதி அளித்ததா என்று தெரியவில்லை.
பல அவதாரங்களில் எது சக்தி வாய்ந்தது என்ற
வாதங்களும் நிறைய உண்டு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவதாரங்கள் வந்த கதை இருக்கும்
போது இன்றைய காலத்தில் கூட சிலரை அவதாரங்களாக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கடவுளின் அவதாரங்கள் வரும் போது, அவற்றை
அடையாளம் கண்டு அதை சொல்லும் அறிவும், அதிகாரமும் யாருக்கு உண்டு? அந்த அவதாரங்களே
தாங்கள் இந்த கடவுளின் அவதாரம் என்று சொல்ல வேண்டுமா? சொன்னால் எவ்வளவு உண்மை என்று
அறிவது? எதுவும் அறியாமலே நம்புவது ஆபத்தில் அல்லவா முடியும். எதை ஏற்றுக் கொள்வது,
எதை மறுப்பது?.
சாதாரண மனிதனே தான் இன்னார் என்று நிரூபிப்பதற்கு
எத்தனை சான்றிதழ் தர வேண்டி இருக்கிறது. இந்த நிலையில், இந்த மூலக்கடவுளின் அவதாரம்
என்று சொல்லப் படும் போது எந்த அளவுக்கு நம்பகத்தண்மை இருக்க வேண்டும். இந்த செய்தியை
மூலக்கடவுளே சொல்ல வேண்டுமா அல்லது அவதாரங்களே சொன்னால் போதுமா, தெரியவில்லை.
பெரும்பாலான மதங்களில் அவதாரங்கள் பற்றிய
பல தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளில் குழப்பங்களும், வித்தியாசங்களும் ஏராளமாக
உள்ளன.
இந்து மதத்தில் விஷ்ணு அவதாரங்களாக பல்வேறு
தகவல்கள் சொல்லப்படுகின்றன. பத்து அவதாரங்களையே மக்கள் வழி படுகின்றனர். அதே நேரத்தில்,
பாகவத புராணபடி 25 அவதாரங்கள் சொல்லப்பட்டு உள்ளது. இந்த அவதாரங்களின் முழுமையான, தெளிவான
சரித்திரம் கிடைக்கப் பெறவில்லை. புத்தர் வேதங்களை ஏற்காததால் நாத்திகர் என்று சொல்லப்பட்டார்,
அதே நேரத்தில் அவர் விஷ்ணுவின் அவதாரமாகவும் சொல்லப்படுகிறார்.
இந்த அவதாரங்களில் காலத்திற்கேற்ப சில சில
மாற்றங்கள் நடந்து வருகிறது. கடவுளுக்கு நிகராக அவதாரங்களையும் இந்துக்கள் வழி படுகின்றனர்.
ஆதி சக்தியின் ஒரு வடிவமான வித்யாசக்தி பத்து
சக்திகளில் பிரிந்து பத்து மஹாவித்யாவாக மாறி விஷ்ணுவின் பத்து அவதாரங்களுக்கு காரணமாக
சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி துர்காவின் நவராத்திரி அவதாரங்களும் வணங்கப் படுகிறது.
சிவனின் ஐந்து முக்கியமான அவதாரங்கள், 11 ருத்ர அவதாரங்கள மற்றும் இதையும் தாண்டி சிவன் 26 அவதாரங்களில் பக்தர்களை காப்பதாக நம்பப் படுகிறது.
ஹேஹய நாடு (Haihaya ), சக்தி வாய்ந்த அரசன், கார்தவீர்ய
அர்ஜுனா-வால் (Kartavirya Arjuna) ஆளப்பட்டது. இந்த அரசன், விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக
சொல்லப்படுகிறது. கடவுள் மட்டுமல்ல, கடவுளின் ஆயுதம் கூட அவதாரமாக சொல்லப் படுகிறது.
திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா (Dalai Lama), அவலோகிடஸ்வரா-வின் (Avalokiteśvara)
அவதாரமாக கருதப் படுகிறார். அமிதாபா-வின் (Amitābha) அவதாரமாக பஞ்சன் லாமாக்கள் (Panchen Lamas) கருதப் படுகிறார்கள்.
மணீஷியன் (Manichaeism) வழக்கத்தில் மணி (Persian man named Mani) தன்னை கிருஸ்துவின் சீடனாக அழைத்துக் கொண்டார்.
ஆதிகால எகிப்தில் பாரோக்கள் (Pharoah) சூரிய கடவுள்களான
ஹோரஸ் (Horus) மற்றும் ரா-வின் (Ra) அவதாரங்களாக கருதப் பட்டனர். எகிப்தில் ட்ரூஸ் (Druze) பிரிவினர் ஹக்கிம்-ஐ
கடவுளின் அவதாரமாக நம்பினர்.
இப்படி தாங்கள் மதித்து போற்றுகின்றவற்றை
கடவுளின் அவதாரமாக சொல்லப் படுவது மக்களின், சமூகத்தின் வழக்கம். ஆனால் சமூகத்தின்
இந்த வழக்கத்தினால் சரித்திரம் மிகவும் குழப்பப் படுகிறது.
மக்களின் வணக்கதுக்குரியவர், கும்பிடப் பட்டு,
அவதாரமாக நினைக்கப்படும் போது அவரைப் பற்றிய சரித்திர உண்மைகள் சரியாக கிடைக்காமல்
போகின்றன. அவரைப் பற்றிய நிகழ்வுகள் மத பார்வையிலேயே பார்க்கப் படுகின்றன. இங்கு சரித்திரப்
பார்வை இயலாமல் போகிறது.
ஒரு சரித்திர நிகழ்வு சரித்திரப் பார்வையில்
பார்க்கப் படும்போது, நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப் படுகின்றன. கிடைக்கும் ஆதாரங்களை
வைத்து உலக அளவில் விவாதங்கள் நடத்தப் படுகின்றன். சரியான விவரங்களை அறிய எப்படி வேண்டுமானாலும்,
எந்த கோணத்திலும் தகவல்களை சேகரித்து உலகிற்கு வெளியிட்டு அனைவருடைய கருத்தையும் அறியலாம்.
ஒரு சுதந்திரமான எண்ணத்தோடு சிந்திக்கலாம்.
ஆனால், அதே சரித்திர நிகழ்வு மதப் பார்வையில்
பார்க்கப் படும்போது விரிவான ஆராய்ச்சிகள் செய்ய பெரும்பாலும் அனுமதி கிடைப்பதில்லை.
ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு சற்று மாறாக இருந்தாலும் அந்த மதத்தினரின் கோபத்தை எதிர்
கொள்ள வேண்டும். எந்த ஒரு சம்பவமும் பக்தி பரவசத்தோடு பார்க்கப் படும். கடவுளின் அருளால்
நடக்கிறது என்று நம்பப் படும். அந்த மதத்தவரின் அன்றைய கால நம்பிக்கைக்கு சற்று மாறாக
பேசவே முடியாது.
இந்த நிலையில், ஆராய்ச்சி செய்யவோ, விவாதங்கள்
செய்யவோ பல இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை. மிகப் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி
இருக்கும். அந்த மதத்தவரின் நம்பிக்கைக்கும், வரலாற்று கருத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை
ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இது எல்லா மதத்திற்கும்
பொருந்தும்.
No comments:
Post a Comment