தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், அதர்மத்தை தர்மம்
வெல்லும் என்பது கண்டும் கேட்டும் அறிந்த ஒரு தத்துவம். இது ஒரே முறை மட்டும் நடக்கும், அல்லது
நடந்தது அல்ல. அது போல இதோடு சரித்திரம்
முடிந்து விடவில்லை. மறுபடி அதர்மம் வெல்லும் இதை மறுபடியும் தர்மம் வெல்லும். இது காலம்
காலமாக நடந்து கொண்டே வருகிறது. ஏன் இந்த தொடர் போராட்டம்? இந்த சரித்திர உண்மையை நாம் வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்க்கலாம்.
தர்மம் அதர்மம் இந்த இரண்டயும் மீறி ஒரு மூன்றாவது காரணி (Factor) இருக்கிறது. அதன் பெயர் “அதிகாரம்” (AUTHORITY/POWER).
தர்மம் அல்லது அதர்மம் இந்த இரண்டில் அதிகாரம் எந்த பக்கம் இருக்கிறதோ அதுவே வெல்கிறது. அதிகாரம் நல்லவர்களின் (தர்மவான்கள்
– Ethical People) கையில் இருக்கும் பொழுது தர்மம் வெல்கிறது. ஆனால் அது
தீயவர்களின் (அதர்மவான்கள் – Unethical People) கையில் வரும்
போது அதர்மம் வெல்கிறது.
ஆனால் அதிகாரம் ஒருவர் கையில், ஒரு இடத்தில், காலம் காலமாக இருப்பதில்லை. எனவே
தர்மமும் அல்லது அதர்மமும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டே வருகிறது. இதனால், புத்தி உள்ளவர்களும் பலம் உள்ளவர்களும் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி ஆதி காலத்திலிருந்து
இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகிறது.
அரசாட்சி காலத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம் நல்ல அரசர்கள் கையில் செல்லும் பொழுது நல்ல ஆட்சி மலர்ந்து தர்மம் வாழ்கிறது. அதே சமயம் அதிகாரம் கொடுங்கோல் அரசர்களிடம் சிக்கும் பொழுது அதர்மத்தின் ஆட்சி நடைபெற்றது.
இன்றைய ஆட்சி அமைப்பில் அரசாங்க அதிகாரம் தர்மவான்களின் கையில் இருக்கும் பொழுது தர்மத்தின் ஆட்சி நடைபெற்று நாடு மேலும் மேலும் வளர்கிறது. மாறாக அரசாங்க அதிகாரம் தவறானவர்களிடம் செல்லும் பொழுது அதர்மத்தின் மோசமான ஆட்சியை காண முடிகிறது.
ஒரு சமூகம் நல்லவர்களின் கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கொடுக்க
வேண்டும். அதற்கு தேவையான அரசியல் அமைப்பும் (Constitutional frame), சூழ்நிலையும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே தர்மம் ஜெயிக்க முடியும். நல்ல சிந்தனையும், நல்ல அரசியல் அறிவும் இல்லாத சமூகத்தில் அதிகாரம் தவறானவர்களின் கையில் செல்லும் பொழுது தர்மம் வலுவிழந்து அதர்மம் வெல்கிறது.
அதிகாரம் தர்மத்தின் கையில் இருக்கும் பொழுது காணப்படும் வளர்ச்சியும் சுபிட்சமும் அதர்மம் வெல்லும் பொழுது அழிக்கப் படுகிறது. ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் பொழுது நடந்து கொண்டிருக்கும் அதர்மங்களை தடுத்து நிறுத்துமே தவிர அதர்மத்தினால் ஏற்பட்ட எல்லா அழிவுகளையும் முழுமையாக மீட்க முடிவதில்லை.
தர்மம் என்பது நல்ல நெறிமுறைகளை கடைபிடிக்க சொல்லும் ஒரு தத்துவம். அரச தர்மம், யுத்த தர்மம், சமூக
தர்மம், வியாபார தர்மம்,
தனி
மனித தர்மம் என்று பல வகைகளில் சொல்லபட்டு
இருக்கிறது. இந்த
தர்மங்கள் தேசத்திற்கு, சமூகத்திற்கு, தனி மனிதனுக்கு ஏற்ப மாறுபடுகிறது. காலங்கள் மாற மாற இந்த தர்மங்களும் மாறி வருகின்றன. தர்மங்களின் ஏற்படும்
மாற்றங்கள் சமூகத்தை பெரிய அளவில் பாதிக்கின்றன.
இப்படி உருவாக்கபட்ட நல்ல
தர்மங்களின் வழியில் ஒரு சமூகம் நடை போட வேண்டும். இந்த
தர்மங்களை காப்பதற்கு ஒரு சமூகம் தர்மவான்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். தர்மத்தின் வழியே
ஒரு சமூகம் ஆளப்படும் பொழுது காணப்படும் நல்லாட்சி அதர்மவான்கள் கையில் சிக்கும் பொழுது சீரழிய தொடங்கி நாடு நாசமாக தொடங்குகிறது.
சர்வதேச அரசியலை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அறிவும் பலமும் உள்ள நாடுகள் மற்ற நாடுகளை அழிக்க பெரும் திட்டங்கள் போட்டு செயல்படுவதுண்டு (International Intelligence). அதில் முக்கியமானது, அந்த நாடுகளின் அதிகாரம் அதர்மவான்களின் கையில் சென்று அடைய திட்டங்கள் தீட்டப்படும். பணபலத்தாலும் மற்ற பிற யுக்திகளினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டில் உள்ள அதிகாரங்களை அதர்மவான்கள் கையில் சென்று அடைய செய்யப்படும். அதன் பின் அந்த நாடுகள் தானாகவே நாசமாக தொடங்கிவிடும். அன்றும் இப்படி அழிந்த
நாடுகள் நிறைய உண்டு, இன்றும் அழிந்து கொண்டிருக்கும் நாடுகளும் உண்டு.
இதே தந்திரம் பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்து கொண்டு வருகிறது. இது ஒரு
வியாபார தந்திரமாக கடைபிடிக்கப்பட்டு வியாபார யுத்தமாக (Corporate
war) நடைபெற்று வருகிறது. எனவே ஒரு நாடோ, ஒரு சமூகமோ அல்லது ஒரு நிறுவனமோ அதன் அதிகாரங்களை திறமையான
நல்லவர்களின் கையில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுவது மிக
மிக முக்கியம்.
இல்லாவிடில், தர்மத்தின் வாழ்வுதனை மறுபடி, மறுபடி சூது கவ்வும், அதர்மத்தை மீண்டும்,
மீண்டும் தர்மம் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment