Pages

Monday 27 January 2014

சம்ப்ரதாயங்கள் - காலங்களை கடந்த ஒரு பார்வை - 2


இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை பற்றி ஆராய்ந்த போது கிடைத்த காரணங்கள் பல்வேறாகவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால் பொதுவாக தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. 

தீபாவளி ஐந்து நாள் விழாவாக சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் நாள் தனத்ரயோதசி (Dhanatrayodashi - தனலக்ஷ்மியை வணங்கும் நாள்), இரண்டாம் நாள் நரக சதுர்தசி (Naraka Chaturdasi or Choti Diwali - சிறிய தீபாவளி - நரகாசுரனை வதம் செய்த நாள்), மூன்றாம் நாள் தீபாவளி நாள் (Lakshmi Puja - லக்ஷ்மி பூஜை), நான்காம் நாள் கார்த்திக சுத்த பத்யாமி (Karthika suddha Padyami). வாமணரால் பாதாளதிற்கு அழுத்தப்பட்ட அரசன் பாலி, வருடம் ஒரு முறை பூமிக்கு வரும் நாள். இதே நாள் பத்வா (Padwa - கணவன் மனைவி இடையே உள்ள அன்பையும் பற்றையும்) கொண்டாடும் நாள், ஐந்தாம் நாள் பாய் துஜ் (Bhai dooj - சகோதர சகோதரி அன்பை) கொண்டாடும் நாள்.

மேலே கூறிய காரணங்கள் மட்டும் இன்றி, ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணனோடு அயோத்திக்கு திரும்பி வந்த நாள் என்று சொல்லப் படுகிறது. பாண்டவர்கள் பதிமூன்று வருடங்கள் (வனவாசம் மற்றும் அஞ்ஞான வாசம்) முடிந்து திரும்பிய நாள் என்றும் நம்பப்படுகிறது. பாற்கடலை கடைந்த போது லக்ஷ்மி பிறந்த நாளை தீபாவளியின் ஆரம்ப நாளாகவும் சொல்லப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தில், தீபாவளி ராவணனை, ராமர் வெற்றி கண்டு அயோத்தி திரும்பியதற்காக கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவை பொருத்தமட்டில் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் நரகாசுரனை சத்யபாமா வதம் செய்ததற்காகவும், பாலி சக்ரவர்த்தியை வீட்டிற்க்கு அழைப்பதற்காகவும் கொண்டாடப் படுகிறது. இன்னும் நிறைய காரணங்கள் தீபாவளிக்காக சொல்லப் படுகிறது.

ஐந்து நாள், ஐந்து காரணங்களுகாக வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி தென்மாநிலங்களில் நரகாசுரனை கொன்றதற்காக மட்டும் கொண்டாடப்படுகிறது. சிறிய தீபாவளியாக வடமாநிலங்களில் கொண்டாடப்படும் நரகாசுர வதம் முக்கிய தீபாவளியாக தென்மாநிலங்களில் கொண்டாடப்படும் காரணம் தெரியவில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவை ஆட்சி செய்ததாக கூறப்படும் நரகாசுரனின் வாரிசுகள் காமரூபம் என்று அழைகப்பட்ட இன்றைய அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தனர். தெற்கு கௌஹாத்தியில் நரகாசுரனின் பெயரில் ஒரு மலையும் உள்ளது.

இந்த சரித்திரத்திற்க்கு எந்த வகையிலும் சம்பந்தபடுத்த முடியாத தென் மாநிலங்களில் நரகாசுர வதம் தீபாவளியாக கொண்டாடப் பட வேண்டிய அவசியத்தை இன்றைய இளைய சமுதாயம் எற்றுக் கொள்ள மறுக்கிறது. அதுபோல தீபங்களின் திருநாள் என்று சொல்லப்படும் தீபாவளி அன்று விளக்குகளை ஏற்றாமல் கார்த்திகை தீபம் அன்று வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றும் தீபத்திருநாளாக கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் நகரங்களில் மட்டும் தீபாவளி முக்கிய பண்டிகையாகவும் கிராமங்களில் பொங்கல் முக்கிய பண்டிகையாகவும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கான காரணங்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் போது அன்று பின்பற்றப்படும் சம்ப்ரதாயங்களை கணக்கிட முடியவில்லை. தீபாவளி திருவிழாவில் மட்டும் பின்பற்ற படும் சம்ப்ரதாயங்களை பற்றி முழுமையாக எழுதுவது இயலாத காரியம்.

தீபாவளி கொண்டாடப்படும் காரணம் இடத்திற்கு இடம், மொழிக்கு மொழி மாறுபடுவதால் அதன் மூலமாக பின்பற்றப் படும் சம்ப்ரதாயங்களின் உள்ள வித்தியாசங்களையும் அதனுடைய மூல காரணங்களையும் ஆராய்ந்து பார்த்து எப்படி அறிய முடியும்?.

பண்டிகை மற்றும் விழாக்கள் ஒரு சமூகத்திற்க்கு நிச்சயம் தேவை. இன்றைய கால கட்டத்தில், ஒரு பண்டிகையின் அல்லது சம்ப்ரதாயங்களின் காரணத்தை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதைப் பற்றிய சமூக அக்கறை இல்லாமல் பண்டிகைகளை கொண்டாடுவதாலும் அதை ஒட்டிய சம்ப்ரதாயங்களை பின் பற்றுவதாலும் நம் சரித்திர வழி சுவடுகளை நாமே இழக்க நேரிடுகிறது.

சரித்திரம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சொத்து. அதை நம் சந்ததியர்களுக்கு சரியாக கொண்டு செல்வது நம்முடைய கடமை. காரணத்தை தொலைத்துவிட்டு, காரியங்களை மட்டும் பின் பற்றுவதால் காலப்போக்கில் குழப்பங்கள் அதிகமாகி எது தேவை, எது அல்ல என்று தெரியாமல் நல்லவற்றை இழந்து, அல்லாதவற்றை பின்பற்றும் அவலம் ஏற்படும். ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

பார்வை தொடரும்.............

No comments:

Post a Comment