Pages

Sunday 12 January 2014

கடவுளும் மருத்துவரும்



மருத்துவரை கடவுளாக காண்பதில் தவறில்லை. ஆனால் மக்கள் கடவுளை மருத்துவராக எண்ணும் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நோய் தீர்க்க மக்கள்  மருத்துவரிடம் செல்வது போல் வாழ்வின் குறை தீர்க்க கடவுளிடம் அதிகமாக செல்ல துவங்கி உள்ளனர்.

மருத்துவரிடம் செல்வதற்க்கு நாம் நல்லவரா கெட்டவரா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் கொடுக்கும் பணம் நல்ல வழியில் வந்ததா அல்லது தீய வழியில் வந்ததா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் சொல்ல படுகின்ற நல்ல நீதிகளை பின் பற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் தீர்த்து வைக்கும் வியாதிக்கேற்பவும், அவரது திறமைக்கு ஏற்பவும் நாம் அவர்களுக்கு கட்டணம் செலுத்துகின்றோம்.

தன்னிடம் யார் வந்தாலும் அவர்களுடைய நோய் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை. அதுபோலவே தன்னிடம் வரும் பக்தர்களின் குறைகளை கடவுள் தீர்த்து வைப்பார், இதற்கு கட்டணமாக நாம் காணிக்கை செலுத்தினால் போதும் என்று மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர்.

கடவுளை நாடும் போது நாம் நல்ல வழியில் நடந்து இருக்க வேண்டும், நம்முடைய பணம் நேர்மையான வழியில் வந்திருக்க வேண்டும், தெரிந்தே குற்றங்களை செய்யாதிருக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை.

கடவுளை வைத்து சொல்லப் பட்ட எந்த நல்ல நெறிகளையும் பின்பற்றாமல், எந்த வித கவலையும், குற்ற உணர்ச்சியும் இன்றி மக்கள் கடவுளிடம் குறை தீர்க்க வேண்டி செல்கின்றனர். இதற்காக எவ்வளவு காணிக்கை வேண்டுமானாலும் செலுத்தவும், எந்த விதமான பரிகாரங்களை செய்யவும், எத்தனை முறை கடவுளை சென்று பார்க்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.

எப்படி மருத்துவர்கள் நம்முடைய நல்ல நடத்தை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கவலைப்பட உரிமையும், அவசியமும் இல்லையோ, அது போல் கடவுளும் நாம் செய்யும் நன்மை, தீமை, நாம் வாழும் வாழ்க்கை முறை, நாம் சம்பாதிக்கும் பணம் ஆகியவை பற்றி கவலை பட மாட்டார் என்று மக்கள் நம்புகின்றனர். அப்படியே கவலை பட்டாலும், காணிக்கை மற்றும் பரிகாரங்களை செய்து கழித்து விடலாம் என்று நம்புகின்றனர்.

அறியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி, திருந்தியவர்களுக்கு மனம் சமாதானம் அடைய பரிகாரங்கள் ஒரு வழியாக சொல்லப் பட்டு இருக்கலாம். ஆனால், பரிகாரங்களே நம்முடைய அனைத்து குற்றங்களுக்கு தீர்வாகாது.

மருத்துவர்கள் கைராசிக்காரராக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் கடவுளும் தன்னிடம் வரும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஒரே எதிர் பார்ப்பு. கடவுளை வணங்குவதற்க்கும் தம் குறைகளை எடுத்து சொல்லி அதை தீர்ப்பதற்க்கும், தம்மை தொடர்ந்து காப்பதற்க்கும் நாம் எந்த வகையிலும் நல்லவராக இருக்க வேண்டும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், எந்த தீய செயலும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற அவசியங்கள் இருப்பதாக மக்கள் கருதவில்லை.

நிறைய பூஜை செய்து, காணிக்கை மற்றும் பரிகாரங்கள் செய்தால் கடவுள் நல்லது செய்து, நம் தவறுகளை மண்ணிப்பார், தண்டிக்க மாட்டார் என்று நம்புகின்றனர். அதிக தவறு செய்யும் போது அதிக காணிக்கை செலுத்த படுகிறது.

கடவுள் ஒரு மருத்துவர் போல நடப்பார் என்ற நம்பிக்கை எப்படி மக்கள் இடையே வளர்ந்தது என்று தெரியவில்லை. கடவுள்கள் மூலம் சொல்ல பட்ட நல்ல நெறிமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் பின் பற்றினால் மட்டுமே கடவுள் அருள் புரிவார் என்று எல்லா மறை நூல்களிலும் சொல்லப் பட்டு இருக்கிறது. ஆனால் நாம் செய்யும் மாபாதகங்களுக்கு கடவுள் நிச்சயம் தண்டிப்பார் என்ற நம்பிக்கை குறைந்து, செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தீவிர பூஜைகளோ, பரிகாரங்களோ செய்து தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே பெருகி வருகிறது.

பெரிய பொது மருத்துவ மனைகளில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் சில நேரம் நல்ல சிகிச்சை கிடைப்பதில்லை. மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. எனவே அதிருப்தி அடையும் மக்கள் சிறிய அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அது போலவே அதிக கூட்டம் உள்ள கோவில்களுக்கு சென்று திருப்தி அடையாமல் போவதால் ஊருக்கு ஒரு கோவில் அல்லது தெருவுக்கு ஒரு கோவில் கட்டி கடவுளை அடிக்கடி சென்று பார்க்கின்றனர். இதன் மூலம் கடவுளோடு அதிகம் தொடர்ப்பு ஏற்படும் என்று நம்புகின்றனர். அதிக மருத்துவமனைகள் இருந்தால் அதிக சேவை கிடைக்கும் என்பது போல் அதிக கோவில் இருந்தால் அதிக அளவில் அருள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

காலம் காலமாக அனைத்து மதங்களிலும் சொல்லப்பட்ட நல்ல தத்துவங்கள் படியும், நல்வாழ்க்கை வழி முறைகளையும் அறிந்து கொண்டும், அதன்படி வாழவும் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை. காணிக்கை, பரிகாரங்கள் மற்றும் அதிக அளவிளான வழி பாடுகள் மூலம் கடவுளை சரி படுத்தினால் தமக்கு அருள் கிடைக்கும் என்று தவறாக ஆனால் தீவிரமாக நம்புகின்றனர்.

எங்கும் பெருகிவிட்ட இந்த வழிமுறைகளுக்கு கடவுள்களிடம் இருந்து எப்படி பதில் கிடைக்க போகிறது என்று காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

1 comment:

  1. Again we are confusing between Doctor and Maruthuvar/vaaithiyar. If you see Dr. is just a doctor who cures or stops your illness. I think you are mentioning that in your post. Actually maruthuvar is not so. He was considered equal to God because those days they are almost living a saint life and giving not only medicines but also the art of living. Hence people considered them equal to God. Nowadays we dont have maruthuvar. we have only doctors.

    ReplyDelete