Pages

Sunday 5 January 2014

சித்தரும், லிங்கமும் – ஒரு சிந்தனை - 3


ஆதி கால கடவுள் நம்பிக்கை, பஞ்ச பூதங்களில் (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) இருந்து உருவானதாக நம்பப்படுகிறது. இந்த ஐந்தில் மிக முக்கியமான ஒன்றாக நெருப்பு கருதப்படுகிறது.  நெருப்பை ஆக்க சக்தியாக அல்லது பயன் படக்கூடிய சக்தியாக மக்கள் அறிந்து கொள்ளுமுன் நெருப்பு ஒரு அழிவு சக்தியாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. சிக்கி முக்கி கல் மூலம் நெருப்பை உருவாக்கி அதை பயன் படுத்த ஆரம்பிக்கும் முன் மக்கள் நெருப்பை எரிமலை மற்றும் காட்டுத்தீ மூலம் பார்த்திருக்கக்கூடும். எனவே நெருப்பை அழிவு சக்தியாக நினைத்து அச்சப்பட்டு வணங்கி வந்தனர்.

நெருப்பு குழம்பின் மூலம் உருவான நிறைய பாறைகள் லிங்க வடிவிலே அமைந்து இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியில் இன்றும் நிறைய லிங்க வடிவ பாறைகளை பார்க்க முடியும். 
 
(Photos taken by us in Krishnagiri)
இது போலவே இயற்கையிலே உருவான லிங்க வடிவ பாறைகளை மக்கள் சுயம்பு லிங்கமாக கருதினர். இது போன்ற பாறைகளில் பெரும்பாலானவை நெருப்பு குழம்பின் மூலமாக உருவானதாகும். நெருப்பு குழம்பின் மூலம் லிங்க வடிவான பாறைகள் உருவானதால் நெருப்பிற்கும் லிங்கத்திற்கும் நிறைய தொடர்ப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
 


லிங்கத்திற்கும் சிவனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டு இருக்க முடியும்?. 

நெருப்பை ஒரு அழிவு சக்தியாகவும், சிவனை ஒரு அழிக்கும் கடவுளாகவும் கருதப்பட்டதால் நெருப்புக் குழம்பின் வடிவமான லிங்கத்தையே சிவனின் அடையாளமாக, வடிவமாக கருதப் பட்டிருக்கலாம். 

எரிமலைகளால் உருவான லிங்க வடிவ பாறைகளை சுற்றி உலோகங்களும், தாதுக்களும் நிறைய இருப்பதினால் அங்கு உள்ள மூலிகைகளை கண்டு அறிய முதல் சித்தராக அறியப்படும் சிவனே லிங்கத்தை அடையாள சின்னமாக உபயோகப்படுத்தி இருக்கக் கூடும்.

கயிலாய மலை ஒரு சில கோணங்களில் பார்க்கும் போது லிங்க வடிவில் தோற்றம் அளிப்பதால் சிவனுடைய அடையாளமாக லிங்கத்தை நினைக்க வாய்ப்பு இருக்கிறது.  

சிவனோடு எல்லா வகையிலும் லிங்க வடிவம் சம்பந்தப் பட்டு இருக்கிறது.

இயற்கையாக தோன்றிய லிங்கத்திற்கு அடிப்பாகம் இல்லை. ஆரம்ப காலத்தில் செய்யப்பட்ட லிங்கங்களிற்கும் அடிப்பாகம் இல்லை. இந்த லிங்கங்களை பாதுகாக்க அபிஷேகங்கள் செய்ய ஆரம்பிக்க பட்ட போது இந்த லிங்கங்கள் மீது ஊற்றப் பட்ட அனைத்தும் கீழே வழிந்து எல்லா பக்கமும் ஓடி இருக்கும்.




மலை பகுதிகளில் உள்ள லிங்கங்கள் மீது அபிஷேகம் செய்யப்பட்ட போது, எந்த பக்கம் ஓடினாலும் பாதகம் இல்லை. ஆனால் கோவில்கள் கட்டப்பட்டு, லிங்கங்கள் கோவில்களில் வைத்த பின் அதன் மேல் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.  அவை பிரசாதமாக கருதப் பட்ட போது, அந்த அபிஷேக நீரை சேகரிப்பதற்க்காக லிங்கத்திற்க்கு அடிபாகம் அமைக்கப்பட்டு இருக்கறது. சில லிங்கங்களின் அடிப்பாகம் சதுரமாகவும் அல்லது வட்டமாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. நீர் அதிகமாக கிடைக்காத இடங்களிலும், அபிஷேகங்கள் தொடர்ச்சியாக செய்ய முடியாத இடங்களிலும் லிங்கத்தை சுற்றி தொட்டி போன்று உருவாக்கி தொடர்ச்சியாக நீரை இருக்க வைத்து லிங்கத்தை பாதுகாத்து வந்தனர்.


இன்றும் எல்லா கோவில்களிலும் அபிஷேக நீரை வழிந்தோட செய்யும் வழியை செதுக்கி இருப்பதை காணலாம்.


எனவே லிங்கத்தை உலகத்தின் இனப்பெருக்கதின் அடையாளமாக கருதப் படுவதை ஏற்க முடியவில்லை. அது மட்டுமின்றி லிங்கம் உலக இனப்பெருக்கதின் அடையாளமாக கருதப் படும் பட்சத்தில் முற்றும் துறந்த முனிவர்களும், ஞானிகளும், துறவிகளும், சித்தர்களும் லிங்கத்தை வழி பட்டு இருக்க வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

அழிவு சக்தியாக கருதப் பட்ட நெருப்பால் உருவான லிங்கத்தை, அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனுடைய உருவமாக, அடையாளமாக கருதப் பட்டு இருக்கிறது. ஆனால்  அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனே மக்களை காக்கும் சித்த மருத்துவத்தை உலகிற்கு அளித்திருக்கிறார். எனவே தங்களின் குருவான சிவனின் அடையாளமாகவும், மூலிகைகளை கண்டு அறியக்கூடிய அடையாள சின்னமாகவும் லிங்கத்தை சித்தர்கள் பயன்படுத்தி போற்றி வந்ததில் ஆச்சரியமில்லை.



1 comment:

  1. "எனவே லிங்கத்தை உலகத்தின் இனப்பெருக்கதின் அடையாளமாக கருதப் படுவதை ஏற்க முடியவில்லை. அது மட்டுமின்றி லிங்கம் உலக இனப்பெருக்கதின் அடையாளமாக கருதப் படும் பட்சத்தில் முற்றும் துறந்த முனிவர்களும், ஞானிகளும், துறவிகளும், சித்தர்களும் லிங்கத்தை வழி பட்டு இருக்க வாய்ப்பு நிச்சயமாக இல்லை". The fact is not right. 90% of our siddhas and saints were in family life and then came to Saint life. Hence they need not hesitate worshipping of Shiva symbol. Hence

    ReplyDelete