Pages

Sunday 2 March 2014

மனிதருடைய கடவுள்கள்

உலகம் முழுவதும் கடவுள்களாக அறியப்பட்ட அனைவரும் உயிரியல் கோட்பாடுகளின்படி (Biological Principles) உள்ளனர். மனித உருவில், விலங்கு உருவில் அல்லது இரண்டும் கலந்த உருவங்களை கொண்டதாக கடவுள்கள் உள்ளனர். உயிரியல் கோட்பாடுகளின்படி தலை, கண், காது, மூக்கு, வாய், கை, கால் ஆகியவை அமையப்பெற்று கடவுளின் உருவமாக வணங்கப்பட்டு வருகின்றனர். கடவுள்கள் ரூப, அரூப வடிவிலும் அதன்பின் மனித உருவிலும் சொல்லப்பட்டு உள்ளனர்.
 
கடவுள்கள் அனைவரும் மனிதர்கள் அறிந்த விஞ்ஞான கோட்பாடுகளின்படியே (Scientific Principles) உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே உருவமற்ற கடவுளை அறிய முயற்சித்து உள்ளனர். கடவுள்களை அனுபவ ரீதியாக அறிந்ததாக சொல்லப்பட்டதே தவிர முழு ஞானமும் தெளிவு படவில்லை. மனித அறிவியல் அறிவை தாண்டி கடவுளை அறிந்து கொள்ள முயற்சி இது வரை முழுமை அடையவில்லை.

தாம் அறிந்த அனைத்திற்கும் பெயரிடும் பழக்கம் மனிதர்களிடம் மட்டும் உள்ளது. இவர்கள் கடவுள்களையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் கடவுள்களுக்கு அந்தந்த கால வழக்கப்படி பெயரிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பெயரிடப்படாத கடவுள் இல்லை.  

தமக்கு ஆபத்து வரும் பொழுது கடவுள் பெரும்பாலும் மனித உருவத்தில் வந்து காத்ததாக சரித்திரம் சொல்கிறது. ஒரு சில  நேரங்களில் விலங்கு வடிவிலும் வந்ததாக கூறபட்டு இருக்கிறது. விலங்குகள் வடிவில் வந்த கடவுள் கூட தான் உருவெடுத்து வந்த இனத்தை காக்காமல் மனிதனையே காப்பாற்றி வந்ததாக கூறப்பட்டு உள்ளது. இது முழுக்க “மனிதனை மையப்படுத்திய சிந்தனை” (Human Centered Thought). கடவுள் மனித உருவிலோ அல்லது விலங்கின் உருவிலோ வந்து தம் இனத்தை மட்டுமே காப்பதாக நம்புகின்றனர். இது போன்ற வடிவங்களில் வந்த கடவுள்கள் மனிதனை தவிர வேறு எந்த இனத்தையும் காத்ததாக சரித்திரம் இல்லை.

 எந்த ஒரு கடவுளும் மான் வடிவில் வந்து மான் இனத்தையோ அல்லது மீன் உருவதில் வந்து மீன் இனத்தையோ காத்ததாக எந்த ஒரு சரித்திரமும் இல்லை. கடவுள் மனித உருவிலோ அல்லது விலங்கு உருவிலோ வந்து மனித இனத்தை மட்டுமே காத்ததாக கூறப்படுகிறது. மரங்களை கூட கடவுளாக வழிபட்டு, அந்த மரங்களின் வடிவில் உள்ள கடவுள் கூட மனிதனுக்கு உதவ அல்லது நல்லது செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர். விலங்கு உருவிலோ அல்லது தாவரங்களின் உருவிலோ வரும் கடவுள் தன்னைத் தவிர மற்ற விலங்கு மற்றும் தாவர இனங்களை காப்பாற்ற மனித மனம் நினைக்கவில்லை. இது ஒரு ஆழமான மனிதனை மையப்படுத்திய சிந்தனை.

உருவில் மிகப்பெரியதாக, அதிக சக்தியை கொண்ட டைனாசரஸ் இனம் ஒரு கால கட்டத்தில் முழுவதும் அழிந்து விட்டது அந்த சமயத்தில் எந்த ஒரு கடவுளும் டைனாசரஸ் வடிவில் வந்து டைனாசரஸ் இனத்தை காக்கவில்லை. இது போல் பல இனங்கள் அழிந்து உள்ளன். ஒரு உயிர் போவது விதி என்று சொல்லப்படலாம், ஆனால் ஓர் இனமே அழிவது விதி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகத்தின் பரிணாம சக்கரத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான இனங்கள் முழுவதுமாக அழிந்துள்ளன. அதிகமாக சிந்திக்க தெரிந்த ஒரே காரணத்தினால் மனிதன் தன்னை உலகத்தில் மிக முக்கியமான இனமாக நினைத்தால் கடவுள் எந்த வடிவிலாவது தம்மை காப்பாற்றுவார் என்று நம்பப்படுகிறது.

 ஒவ்வொரு இனத்திற்கும் அதன் “சிந்தனையின் அளவுகோல்” உண்டு  (Thought Scale). மனிதனுடய சிந்திக்கும் அளவு நாமறிந்த வரையில் மிக அதிகம். இந்த ஒரு காரணத்தினாலேயே கடவுள் நம்மை காப்பாற்றுவார் அல்லது காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

சூரிய மண்டலத்தில் ஏற்படக்கூடிய ஒரு விபத்தால், பூமி அதன் சுற்றுவழியில் இருந்து விலக்கப்பட்டாலோ அல்லது தூக்கி எறியப்பட்டாலோ மனித இனம் சில நொடிகளில் அழிந்துவிடும். ஒரு இனம் உருவாவதும், அழிவதும் இயற்கையில் நடந்து வரும் செயலாகும், இதற்கு மனித இனமும் விதிவிலக்கல்ல. எனவே மனிதன் தன் இனத்தை மட்டும் கடவுள் எந்த வடிவிலாவது காப்பாற்றுவார் என்பது ஒரு  நம்பிக்கையே. சிந்திக்க தொடங்கிய மனிதனுக்கு தன்னைவிட சக்தி படைத்தவர் தன்னை காப்பாற்றுவார் என்ற தீவிர நம்பிக்கை உள்ளது. அதனால் எப்பாடுபட்டாவது, எந்த வழியிலாவது, வணங்கியோ, வழிப்பட்டோ தன்னை விட அந்த பெரிய சக்தியிடம் இருந்து உதவி பெற்றுவிட வேண்டும் என்ற தீவிர போராட்டம் காலம் காலமாக  நடந்து கொண்டே வருகிறது.

மனிதனைவிட குறைவான சிந்தனை அளவுகோல் கொண்ட விலங்குகள் தன்னுடைய கஷ்டங்களை பற்றி அதிகம் சிந்திப்பதாக தெரியவில்லை. எனவே அவற்றுக்கு தன்னை காப்பற்றிக்கொள்ள தன்னைவிட பெரிய சக்தியிடம் வழிபட வேண்டும் என்று கூட தோன்றவில்லை .எனவே தான் அவற்றுக்கு கடவுளை பற்றிய ஞானம் தேவைப்படவில்லை.