Pages

Sunday, 5 June 2016

யுத்தம் - ஏன்? எதற்கு?

ஒரு அரசர் நிறைய நாடுகளை பிடித்தால் அவரை பேரரசர், சாம்ராட், சுல்தான் என்று அழைப்பது நாம் செய்த மிகப் பெரிய தவறு. தன்னுடைய சாம்ராஜ்யத்தை பெருக்கிக் கொள்ள மற்ற நாடுகளோடு சண்டை போட்டு அந்த நாடுகளை தன் கீழ் கொண்டு வருவது பாராட்டக்கூடிய செயல் அல்ல. மனித குலம் தனக்கு தானே அழித்துக் கொள்ள நடந்து வரும் கொடுமை.

எந்த யுத்தமும் மனிதாபிமானத்தோடு (?) நடந்ததில்லை, நடப்பதில்லை. மனிதனுடைய உச்ச கட்ட கொடூரத்தை, கொலை வெறியை அங்கு பார்க்கலாம். எதற்காக? தன்னுடைய நாட்டை விரிவாக்கி ஆளுவதனால் மக்களுக்கு என்ன நன்மை?. தன்னை சரித்திரம் மாவீரன் என்று அழைக்க அரசர்களுக்கு ஏற்பட்ட ஆசையும், யுத்த வெறியும் நாடு பிடிக்கும் கொடுமையாக இருக்கிறது. ஒவ்வொரு யுத்தத்திலும் தன்னுடைய வீரர்களை பலி கொடுத்து எதிரி (?) நாட்டு வீரர்களையும் கொன்று பெறும் வெற்றியால் என்ன கிடைக்க போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைத் தவிர வேறென்ன? ஒரு அரசர் சிறிய நாட்டை ஆளுவதற்கும் பெரிய நாட்டை ஆளுவதற்கும் சரித்திரத்தில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது. நாடுகள் பிடிக்கப் பட்டு ஒன்றாக சேர்க்கப் பட்டு சில காலத்தில் துண்டு துண்டாக உடைந்து போன சரித்திரம் ஏராளம். இடையில் எத்தனை மரணம், எத்தனை அழிவு.




தம்மை காத்துக் கொள்ள ஒரு நாடு போரிடுவது வேறு, நாட்டை விரிவு படுத்த போரிடுவது வேறு. எதிரி நம்மை தாக்க வரும் போது நம்மை காப்பாற்றிக் கொள்ள போரிட்டுதான் ஆக வேண்டும். திறமையான படை அமைப்பும், நல்ல போர் திறமையும், ஆயுத பலமும் ஒரு நாட்டுக்கு நிச்சயம் தேவை. தம்மை காத்துக் கொள்ளவே தவிர மற்ற நாடுகளை பிடிக்க அல்ல.




தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை பெரிதாக்க நடத்தப் படும் போர்களை எந்த வகையில் நியாயப் படுத்த முடியும். ஒரு அரசனுடைய சிறப்பு தன்னுடைய ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சி கொடுப்பதுதான். நாடு எவ்வளவு பெரியது என்பது அல்ல. சிறு சிறு நாடுகளாக இருந்தால் என்ன தவறு?. மக்கள் நன்றாக வாழ வேண்டுமே தவிர எத்தனை போர்கள், எவ்வளவு அழிவு, எல்லை எவ்வளவு பெரியதானது என்று பார்க்கும் கொடுமையை பெருமையாக பல யுகங்களாக செய்து வருகிறோம்.
 
அலக்ஸாண்டர் தி க்ரேட் (Alexander the great), சரித்திரத்தில் தோல்வியே பார்க்காத மாபெரும் வீரனாக, யுத்த மேதையாக இன்று வரை போற்றப் படுகிறார். அவர் ஒரு மாவீரர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் நாணயத்தின் மறுபக்கத்தை பார்க்கும் போது அவருடைய 10 வருட போரினால் அழிந்தவர்கள் ஏராளம், ஏராளம். நாசமான நகரங்கள் ஏராளம். மாசிடோனியா முதல் வட இந்தியா வரை தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்

போரின் போது அலக்ஸாண்டர் தீப்ஸ் (Thebes) நகரை தரை மட்டமாக்கினார். டைரே (Tyre) - வை வெற்றி கொண்டு அங்கு இருந்த போரிடக் கூடிய ஆண்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர். பெண்களும், சிறுவர்களும் அடிமைகளாக விற்கப் பட்டனர். பெர்சிபொலிஸ் நுழைந்ததும் அவருடைய படை வீரர்களை சூறையாட அனுமதித்தார். இந்த சூறையாடல் நிறைய நாட்களுக்கு நடந்தது

அலக்ஸாண்டர் தன்னுடைய 20 வயது முதல் 32 வயது வரை போரிட்டுக் கொண்டே இருந்தார். 32 வயதில் திடீரென்று அலக்ஸாண்டர் இறந்ததால் அவருடைய சாம்ராஜ்ஜியம் உடைய ஆரம்பித்தது. வாரிசு சண்டையினால் சுமார் 40 வருடம் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. அதன் பின் 4 பெரிய பிரிவுகளாக உடைந்தது. அதற்கு அப்புறம் வேறு வேறு நாடுகளாக உருவாயின.




சரித்திரம் போற்றும் மற்றொரு மாவீரன் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte). இவரின் தொடர் யுத்தங்களினால் கிட்டத்தட்ட எழுபது லட்சம் பேர் கொல்லப் பட்டனர். 

சிரியாவின் முக்கிய வியாபார இடமான ஜாஃபா (Jaffa)-வை நெப்போலியன் வெற்றி கொண்டபோது அவரின் கடும் கோபத்தினால் ஜாஃபாவில் உள்ள அனைவரும் கொடுமையாக கொல்லப் பட்டனர். அவருடைய அனுமதியின் பேரில் இரவு பகலாக கொலைகளும், பெண் கொடுமைகளும் நடத்தப் பட்டன. 

ரஷ்யா உடன் போரோடினோ (Borodino) போரில் 44,000 ரஷ்யாவின் வீரர்களும் 35,000 ஃப்ரெஞ்சு வீரர்களும் பலமான காயங்கள் பட்டோ சிறை பிடிக்கப் பட்டோ மற்றும் கொல்லப் பட்டனர். அன்றைய சரித்திரத்தில் இந்த போர் ஒரு பெரிய ரத்த களமான போராக இருந்தது. 

ஃப்ரெஞ்சு படையினர் 4 லட்சம் பேர் ரஷ்யாவின் உடன் போரில் இறங்கினர். ஆனால் யுத்தம் முடியும் தறுவாயில் 40,000 பேர் மட்டுமே உயிரோடு பெரிசினா ஆற்றை (Berezina River) கடந்தனர்.  ரஷ்யர்களின் தரப்பில் 1,50,000 வீரர்களும், பல்லாயிரக் கணக்கான பொது மக்களும் இறந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் யுத்தங்களில் வெற்றியை பெற்ற நெப்போலியன் ரஷ்ய யுத்தத்தில் தோற்று கைது செய்யப் பட்டார்.

செங்கிஸ்கான் (Genghis Khan) ஒரு மாபெரும் தலைவராக, வீரராக சொல்லப் படுகிறார். அவருடைய தொடர் யுத்தத்தால் சுமார் 4 கோடி மக்கள் கொல்லப் பட்டனர். உலக மக்கள் தொகையில் சுமார் 11% அழிக்கப் பட்டனர். 

மங்கோலியர்கள் சாமர்கண்ட் (Samarkand)- ஐ வெற்றி கொண்டதும் செங்கிஸ்கானை எதிர்த்து போரிட்ட அனைத்து போர் வீரர்களும் கொல்லப் பட்டனர். அங்கிருந்த மக்களை ஊருக்கு வெளியே ஒன்றாக வரவழைத்து அனைவரும் கொல்லப் பட்டனர். வெட்டப் பட்ட தலைகள் மலை போல் குவிந்து செங்கிஸ்கானின் வெற்றியை பறை சாற்றியது. அவர் வெற்றி கொண்ட நிறைய நாடுகளில் மக்கள் கூண்டோடு அழிக்கப் பட்டன. நகரங்கள் அடியோடு அழிக்கப் பட்டன. 

தைமுர் (Timur) ஆட்சி காலத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய அனைத்தும் அவரைக் கண்டு மிகவும் அஞ்சின. அவருடைய படை சென்ற இடங்கள் அழிவு கண்டது. 170 லட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். இது அன்றைய மக்கள் தொகையில் 5% ஆகும். தைமுர் ராணுவ மேதை என்றும் போர் திட்டங்களை தீட்டுவதில் வல்லவர் என்று சரித்திரம் சொல்கிறது. தைமூரின் ஆதரவு பெற்ற டோக்டமிஷ் மாஸ்கோ முழுவதும் எரித்தார்.

தைமுர் ஹீரட் நகரை வென்று அதை தரை மட்டமாக்கி, அங்குள்ள பெரும்பாலான மக்களை படுகொலை செய்தார். இந்திய மற்றும் பாக்கிஸ்தான் மீது படை எடுத்து பலரை படுகொலை செய்தார். தனது போர் தந்திரங்களினால் டில்லி சுல்தானை வென்று டெல்லியில் இருந்த மக்கள் அனைவரையும் கொன்றார்
 
இரு நூற்றைம்பது வருட மங்கோல் யுத்தங்களினால் கொல்லப்பட்ட மக்கள் தொகை கிட்டத்தட்ட மூன்றில் இருந்து ஆறு கோடி. மஞ்சூரியன் பேரரசின் விரிவாக்கத்தால் கொல்லப்பட்ட மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டில் இருந்து மூன்று கோடி.



இது சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு சில உதாரணங்கள். இதை விட பெருவாரியான கொலை, பேரழிவு, கொடுமையான போர்கள் எத்தனை, எத்தனை?. எரிக்கப் பட்ட நகரங்கள் எத்தனை?. தரைமட்டமாக்கப்பட்ட ஊர்கள் எத்தனை?. 

சுமார் 5000 வருடங்கள் சரித்திரத்தை திரும்பி பார்க்கையில் எந்த தேசத்தின் எல்லை இது வரை மாறாமல் இருந்திருக்கிறது? எத்தனை அரச வம்சங்கள் அழிந்து போயின? எத்தனை அரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. ஒரே குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? 



நாடுகள் பிரிய பிரிய சேர்க்கப் படுகிறது. சேர்க்க சேர்க்க பிரிக்கப் படுகிறது. சரித்திரம் முழுக்க இதுதானே காணப் படுகிறது.

Tuesday, 5 April 2016

கடவுளும் அவதாரங்களும் – சரித்திர சிக்கல்

கடவுள்களை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியாக நிறைய தத்துவங்களும், விளக்கங்களும், இருந்தாலும் இன்னும் முழுமை அடையவில்லை. கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி விரிவாக கேள்வி கேட்க அனுமதி இல்லாததாலும் அறிவியல் முறைப் படி பகுத்து ஆராய இயலாததாலும் கடவுள்களின் எண்ணிக்கையும் அதிகம், அவதாரங்களும் அதிகம், குழப்பங்களும் அதிகம்.

நம்புவது வேறு, நிஜத்தை அறிவது வேறு. எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கடவுளாக நம்புவது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அவர்கள் நம்பும்போது எந்த விளக்கமும் தேவையில்லை, முழு சரித்திரமும் தேவை இல்லை. உலகில் உள்ள எத்தனை பேருக்கு தாங்கள் வணங்கும் கடவுளைப் பற்றிய சரியான விவரங்கள் தெரியும்?.

இந்த நிலையில் கடவுளின் அவதாரங்கள் என்று சொல்லப்படுகிற உப கடவுள்களின் விவரங்களில் கதைகளும், குழப்பங்களும் நிறைய இருக்கின்றன. ஒரு மனிதப் பிறவி, விலங்கு, உயிருள்ள அல்லது உயிற்ற பொருள்கள் ஆகியவற்றை அவதாரங்களாக சொல்லப் படும் போது அதனுடைய நம்பகத் தன்மை பற்றிய பல தகவல்கள் தேவைப் படுகிறது., யாரிடம் விவரங்கள் அறிந்து கொள்ள முடியும்?

ஒரு மூலக் கடவுளின் அவதாரமாக ஒன்றை சொல்லும் போது எந்த அடிப்படையில் சொல்லப் படுகிறது என்று கட்டுப்பாடுகள் இல்லை. யாரை வேண்டுமானாலும் யாருடைய அவதாரமாக வேண்டுமானாலும் சொல்ல முடியும். எப்படி என்று கேட்க அனுமதி இல்லை. உண்மையா இல்லையா என்பதற்கு விவரங்கள் இல்லை. சில சமயங்களில், சிலரின் நம்பிக்கையாக அவதாரங்கள் சொல்லப் பட்டு நாளடைவில் அனைவராலும் ஏற்கப் பட்ட நிலை நிறைய உண்டு. இதற்கு அந்த மூலக் கடவுள் அனுமதி அளித்ததா என்று தெரியவில்லை.

பல அவதாரங்களில் எது சக்தி வாய்ந்தது என்ற வாதங்களும் நிறைய உண்டு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவதாரங்கள் வந்த கதை இருக்கும் போது இன்றைய காலத்தில் கூட சிலரை அவதாரங்களாக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

கடவுளின் அவதாரங்கள் வரும் போது, அவற்றை அடையாளம் கண்டு அதை சொல்லும் அறிவும், அதிகாரமும் யாருக்கு உண்டு? அந்த அவதாரங்களே தாங்கள் இந்த கடவுளின் அவதாரம் என்று சொல்ல வேண்டுமா? சொன்னால் எவ்வளவு உண்மை என்று அறிவது? எதுவும் அறியாமலே நம்புவது ஆபத்தில் அல்லவா முடியும். எதை ஏற்றுக் கொள்வது, எதை மறுப்பது?.

சாதாரண மனிதனே தான் இன்னார் என்று நிரூபிப்பதற்கு எத்தனை சான்றிதழ் தர வேண்டி இருக்கிறது. இந்த நிலையில், இந்த மூலக்கடவுளின் அவதாரம் என்று சொல்லப் படும் போது எந்த அளவுக்கு நம்பகத்தண்மை இருக்க வேண்டும். இந்த செய்தியை மூலக்கடவுளே சொல்ல வேண்டுமா அல்லது அவதாரங்களே சொன்னால் போதுமா, தெரியவில்லை.

பெரும்பாலான மதங்களில் அவதாரங்கள் பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளில் குழப்பங்களும், வித்தியாசங்களும் ஏராளமாக உள்ளன.


இந்து மதத்தில் விஷ்ணு அவதாரங்களாக பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. பத்து அவதாரங்களையே மக்கள் வழி படுகின்றனர். அதே நேரத்தில், பாகவத புராணபடி 25 அவதாரங்கள் சொல்லப்பட்டு உள்ளது. இந்த அவதாரங்களின் முழுமையான, தெளிவான சரித்திரம் கிடைக்கப் பெறவில்லை. புத்தர் வேதங்களை ஏற்காததால் நாத்திகர் என்று சொல்லப்பட்டார், அதே நேரத்தில் அவர் விஷ்ணுவின் அவதாரமாகவும் சொல்லப்படுகிறார்.

இந்த அவதாரங்களில் காலத்திற்கேற்ப சில சில மாற்றங்கள் நடந்து வருகிறது. கடவுளுக்கு நிகராக அவதாரங்களையும் இந்துக்கள் வழி படுகின்றனர்.

ஆதி சக்தியின் ஒரு வடிவமான வித்யாசக்தி பத்து சக்திகளில் பிரிந்து பத்து மஹாவித்யாவாக மாறி விஷ்ணுவின் பத்து அவதாரங்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி துர்காவின் நவராத்திரி அவதாரங்களும் வணங்கப் படுகிறது.

சிவனின் ஐந்து முக்கியமான அவதாரங்கள், 11 ருத்ர அவதாரங்கள மற்றும் இதையும் தாண்டி சிவன் 26 அவதாரங்களில் பக்தர்களை காப்பதாக நம்பப் படுகிறது.

ஹேஹய நாடு (Haihaya ), சக்தி வாய்ந்த அரசன், கார்தவீர்ய அர்ஜுனா-வால் (Kartavirya Arjuna) ஆளப்பட்டது. இந்த அரசன், விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக சொல்லப்படுகிறது. கடவுள் மட்டுமல்ல, கடவுளின் ஆயுதம் கூட அவதாரமாக சொல்லப் படுகிறது.

திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா (Dalai Lama), அவலோகிடஸ்வரா-வின் (Avalokiteśvara) அவதாரமாக கருதப் படுகிறார். அமிதாபா-வின் (Amitābha) அவதாரமாக பஞ்சன் லாமாக்கள் (Panchen Lamas) கருதப் படுகிறார்கள். மணீஷியன் (Manichaeism) வழக்கத்தில் மணி (Persian man named Mani) தன்னை கிருஸ்துவின் சீடனாக அழைத்துக் கொண்டார்.

ஆதிகால எகிப்தில் பாரோக்கள் (Pharoah) சூரிய கடவுள்களான ஹோரஸ் (Horus) மற்றும் ரா-வின் (Ra) அவதாரங்களாக கருதப் பட்டனர். எகிப்தில் ட்ரூஸ் (Druze) பிரிவினர் ஹக்கிம்-ஐ கடவுளின் அவதாரமாக நம்பினர்.

இப்படி தாங்கள் மதித்து போற்றுகின்றவற்றை கடவுளின் அவதாரமாக சொல்லப் படுவது மக்களின், சமூகத்தின் வழக்கம். ஆனால் சமூகத்தின் இந்த வழக்கத்தினால் சரித்திரம் மிகவும் குழப்பப் படுகிறது.


மக்களின் வணக்கதுக்குரியவர், கும்பிடப் பட்டு, அவதாரமாக நினைக்கப்படும் போது அவரைப் பற்றிய சரித்திர உண்மைகள் சரியாக கிடைக்காமல் போகின்றன. அவரைப் பற்றிய நிகழ்வுகள் மத பார்வையிலேயே பார்க்கப் படுகின்றன. இங்கு சரித்திரப் பார்வை இயலாமல் போகிறது.

ஒரு சரித்திர நிகழ்வு சரித்திரப் பார்வையில் பார்க்கப் படும்போது, நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப் படுகின்றன. கிடைக்கும் ஆதாரங்களை வைத்து உலக அளவில் விவாதங்கள் நடத்தப் படுகின்றன். சரியான விவரங்களை அறிய எப்படி வேண்டுமானாலும், எந்த கோணத்திலும் தகவல்களை சேகரித்து உலகிற்கு வெளியிட்டு அனைவருடைய கருத்தையும் அறியலாம். ஒரு சுதந்திரமான எண்ணத்தோடு சிந்திக்கலாம்.

ஆனால், அதே சரித்திர நிகழ்வு மதப் பார்வையில் பார்க்கப் படும்போது விரிவான ஆராய்ச்சிகள் செய்ய பெரும்பாலும் அனுமதி கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு சற்று மாறாக இருந்தாலும் அந்த மதத்தினரின் கோபத்தை எதிர் கொள்ள வேண்டும். எந்த ஒரு சம்பவமும் பக்தி பரவசத்தோடு பார்க்கப் படும். கடவுளின் அருளால் நடக்கிறது என்று நம்பப் படும். அந்த மதத்தவரின் அன்றைய கால நம்பிக்கைக்கு சற்று மாறாக பேசவே முடியாது.

இந்த நிலையில், ஆராய்ச்சி செய்யவோ, விவாதங்கள் செய்யவோ பல இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை. மிகப் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த மதத்தவரின் நம்பிக்கைக்கும், வரலாற்று கருத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.  இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.